News

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்; 5 பேர் பலி – 100-க்கும் அதிகமானோர் காயம்

 

 

பிலிப்பைன்ஸை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 5 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள அப்ரா மாகாணத்தை மையத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி அமைந்திருந்தது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8:43 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது அப்ரா மாகாணத்தில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாகாணத்தில் வீடுகள், கடைகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கமானது அண்டை மாகாணமான பெங்குவெட், தலைநகர் மணிலா உள்ளிட்ட பல இடங்களிலும் உணரப்பட்டது.

இதனிடையே நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதாகவும், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பெருமளவு மக்கள் வீடுகளுக்கு செல்ல அஞ்சி தொடர்ந்து வீதிகளிலும், தற்காலிக முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (pacific ring of fire) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top