News

போர்த்துக்கல், ஸ்பெயினில் கடும் வெப்ப அலை; காட்டுத் தீயால் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிவு!

 

 

போர்த்துக்கல் மத்திய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் காட்டுத் தீ பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். போர்த்துக்கலில் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அண்மைய நாட்களில் பதிவானது. லிஸ்பனின் வடக்கே உள்ள ஊரேம் நகராட்சியில் கடந்த வாரம் தொடங்கிய ஒரு காட்டுத்தீ, பலத்த காற்று காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வேகமாக எரியத் தொடங்கியது.

நேற்று மாலை வரை பல கிராமங்களில் இருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டதாக போர்த்துக்கல் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊரேம் நகராட்சிக்கு அருகில் உள்ள லீரியா நகராட்சி பகுதியில் சில வீடுகள் எரிந்து நாசமாயின. தீயினால் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

“காட்டுத்தீ எனது வீட்டிற்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். தீயை எதிர்த்துப் போராடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என ஐந்து தசாப்தங்களாக ஊரேம் நகராட்சியில் ஒரு சிறிய கிராமத்தில் வரும் 75 வயதான ஓய்வு பெற்ற ஜோவாகிம் கோம்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீயை அணைக்க போதிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் வளங்கள் இல்லை என பல உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

“நிலைமை சிக்கலாக உள்ளது. தீயை அணைக்க போராடுவதற்கு தேவையான வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன” என்று சிவில் பாதுகாப்புத் தளபதி ஆண்ட்ரே பெர்னாண்டஸ் கூறினார். “அடுத்த சில நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.

போர்த்துக்கல் முழுவதும் தற்போது 14 இடங்களில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தற்போது 501 வாகனங்களின் ஆதரவுடன் சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவல் காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிவப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளனர். இது மிக உயர்ந்த மட்டமாகும்.

இதேவேளை, போர்த்துக்கல் அண்டை நாடான ஸ்பெயினில் மேற்கு பகுதியில் உள்ள லாஸ் ஹர்டெஸ் என்ற இடத்தில் குறைந்தது 1,500 ஹெக்டேர் (3,700 ஏக்கர்) பரபரப்பளவு காடுகள் தீயினால் நாசமாகியுள்ளன. சுமார் 400 குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று பிராந்திய நேற்று அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசமான காஸ்டில் மற்றும் லியோனில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடமேற்கு மாகாணமான அவுரென்ஸில் (Ourense) வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதிகளில் இந்த வாரம் மற்றும் அடுத்த வார தொடக்கத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இங்கிலாந்து வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐரோப்பாவில் இரண்டாவது அதிக வெப்ப அலை போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினை அதிகமாகப் பாதித்துள்ளது. அது மற்ற இடங்களில் பரவ வாய்ப்புள்ளது என நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக வானிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிளேர் நுல்லிஸ் தெரிவித்தார்.

மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் வறட்சியைத் தூண்டுவதால், அடுத்த 28 ஆண்டுகளுக்குள் தீவிர காட்டுத் தீ அனர்த்தங்கள் 30% அதிகரிக்கும் என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top