News

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை: இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

 

 

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இலங்கையில் கடந்த 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர், மகிந்த ராஜபக்சே. ராஜபக்சே குடும்பம் விடுதலைப்புலிகளுடனான 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் வெற்றியடைந்ததன் மூலம் சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாக உயர்ந்தார்.

அப்படியே தங்கள் குடும்பத்தினரையும் அரசில் இணைத்துக்கொண்டு பெரும் ராஜாங்கத்தையே நடத்தி வந்தார். இதனால் இலங்கை அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த குடும்பமாக ராஜபக்சே குடும்பம் கருதப்பட்டது.

அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே 2015-ல் இறங்கினாலும் அவரது அதிகார மோகம் தீரவில்லை. எனவே அதற்கு தீனி போடும் வகையில், 2019-ம் ஆண்டு அதிபரான அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே, மகிந்தவை மீண்டும் பிரதமராக அமர்த்தி அழகு பார்த்தார்.

அதுமட்டுமின்றி மூத்த சகோதரர் சமல் ராஜபக்சே, இளைய சகோதரர் பசில் ராஜபக்சே, மகிந்த ராஜபச்சேவின் மகன் நமல் ராஜபக்சே என அவரது குடும்பத்தினர்களுக்கு பல்வேறு அமைச்சகங்களும் ஒதுக்கப்பட்டன. இப்படி இலங்கை அரசு அதிகாரம் முழுவதும் எப்போதும் தங்கள் குடும்பத்தினரிடமே இருக்க வேண்டும் என அவர்கள் பார்த்துக்கொண்டனர்.

பொருளாதார வீழ்ச்சி ஆனால் நாளடைவில் ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டு கிளம்பியது. அதுமட்டுமின்றி உள்நாட்டுப்போர் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து அளவுக்கதிகமாக பெறப்பட்ட கடன்களும் அரசை நெருக்கியது

இத்துடன் இலங்கையை சூழ்ந்து கொண்ட கொரோனா பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பை கரைத்த சுற்றுலாத்துறை முடக்கம் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இப்படி ஒன்றுக்குப்பின் ஒன்றாக சிக்கல்கள் தீவிரமடைந்ததால் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அதேநேரம் இவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அல்லது பிரதமர் மகிந்த ராஜபக்சேவால் முடியவில்லை. நெருக்கடி எனவே அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

ஆளும் கூட்டணிக்குள்ளும் போர்க்குரல்கள் எழுந்ததுடன், பல எம்.பி.க்கள் விலகி சுயேச்சையாக அமர்ந்தனர். ஆனால் அப்போதும் பணியாத மகிந்தவும், கோத்தபயவும் தங்கள் பதவி நாற்காலிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க தயாராகவில்லை. மாறாக நிதி மந்திரியாக இருந்த தங்கள் தம்பி பசில் ராஜபக்சேவின் பதவியை மட்டும் பறித்துக்கொண்டனர். முன்னதாக சமல், நமல் ராஜபக்சேக்களும் மந்திரி சபையில் இருந்து விலகியிருந்தனர்.

இதற்கிடையே இலங்கையின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் கிடைக்காமல் மக்களின் துயரம் அதிகரித்தது. ராஜினாமா இதைத்தொடர்ந்து கோத்தபய மற்றும் மகிந்தவுக்கு எதிராக அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கினர். கடந்த மே 9-ந்தேதி பொதுமக்கள் நடத்திய பெரும் போராட்டம் மற்றும் வன்முறையால் கொழும்பு நகரமே போர்க்களமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதன் பின்னரே இறங்கி வந்த மகிந்த ராஜபக்சே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அப்போதும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை. எனவே அவர் மீதான கோபம் மக்களிடையே அதிகரித்தது.

இது கடந்த 9-ந்தேதி பெரும் புயலாக அடித்தது. மீண்டும் ஒரு புரட்சிக்கு வித்திட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலை அலையாக கொழும்பை முற்றுகையிட்ட மக்கள், அதிபர் மாளிகையில் அதிரடியாக புகுந்து சூறையாடினர். இந்த மக்கள் திரளுக்கு முன் நிற்க துணியாத கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறி கடந்த 13-ந்தேதி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அங்கும் போராட்டம் வெடித்ததால் நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு தப்பினார்.

இதற்கிடையே அதிபர் பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு கடிதம் அனுப்பி விட்டார். இதன் மூலம் இலங்கை அரசியலில் ராஜபக்சேக்களின் அதிகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஆனாலும் இலங்கை தீவையும், மக்களையும் பெரும் துயரில் தள்ளிவிட்ட ராஜபக்சேக்கள் மீதான மக்களின் கோபம் தணியவில்லை. அவர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மறுபுறம், ராஜபக்சேக்களுக்கு எதிராக சட்ட போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. பல்வேறு தரப்பினர் சார்பில் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக சர்வதேச சிவில் சமூக அமைப்பான ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் கருவூல செயலாளர் அட்டிகலா ஆகியோர்தான் காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

குறிப்பாக இலங்கையின் தாங்க முடியாத வெளிநாட்டுக்கடன், அதை திருப்பி செலுத்த முடியாத நிலை, தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு இவர்கள்தான் நேரடி காரணம் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 28-ந்தேதி வரை தடை கடந்த ஜூன் 17-ந்தேதி இந்த வழக்கை தாக்கல் செய்த அந்த அமைப்பினர், இந்த வழக்கு விசாரணை முடியும்வரை மேற்படி ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 28-ந்தேதி வரை மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இலங்கையில் தங்களுக்கு எதிரான போராட்டமும், சட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருவதால் கடந்த 12-ந்தேதி பசில் ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல முயன்றார். இதற்காக விமான நிலையம் வந்த அவரை கண்டதும் பிற பயணிகள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அவரை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் வீட்டுக்கே திருப்பி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் சிங்களர்களின் ஹீரோக்களாக இருந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு தற்போது நாட்டை விட்டு வெளியேறவே தடை விதிக்கப்பட்டு இருப்பது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top