மூளைச் சாவடைந்த இருவருக்கு மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்ட பன்றி இதயத்தை பொருத்தி அமெரிக்கா – நியூயோர்க் பல்கலைக்கழக (NYU) அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த பன்றி இதயங்களை மனிதர்களுக்கு மாற்றும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறினர்.
மனித உறுப்புகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பன்றிகளின் பாகங்களை பயன்படுத்துவதற்கான மருத்துவ உலகின் நீண்ட கால இலக்கை நோக்கி நகர்வதன் முக்கிய படியாக இந்த அறுவைச் சிகிச்சை அமைந்துள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட மூன்று நாள் சோதனைகளின் போது பன்றியின் இதயங்களை மனித உடல் நிராகரித்தமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மனிதர்களுக்கு பன்றி இதயங்கள் சாதாரணமாக செயல்பட்டதாக அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
உலகில் முதன்முறையாக மனிதனுக்கு மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் இவ்வாண்டு ஜனவரி மாதம் சாதனை படைத்தனர்.
பன்றியின் இதயத்தை பொருத்தி இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட உலகின் முதல் மனிதன் என பெருமையை அமெரிக்கரான டேவிட் பென்னட் பால்டிமோர் என்பவர் பெற்றார்.
7 மணி நேரங்கள் நடந்த இந்த பன்றி இதயமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரு மாதங்கள் நன்றாக இருந்த டேவிட் பென்னட் பால்டிமோர் பின்னர் உயிரிழந்தார். அவரது புதிய இதயம் இறுதியில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்பு, 57 வயதான த பென்னட் இறந்துவிடுவார் அல்லது இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்ற இரண்டு தெரிவுகளே இருந்த நிலையிலேயே அவருக்கு பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினர்
மனிதருக்கு பன்றி இதயத்தைப் பொருத்தி அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அறுவைச் சிகிச்சை இந்த ஆய்வின் உச்சமாக இருந்தது.
இதேவேளை, அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 17 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். 100,000 க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை உதவித் தளமான OrganDonor.gov தரவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தேவையை பூர்த்தி செய்ய விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான (xenotransplantation) சாத்தியக்கூறு குறித்து நீண்ட காலமாக ஆய்வுகள் இடம்பெறுகின்றன. மனிதர்களுக்கு பன்றி இதய வால்வுகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானதாக உள்ளது.
ஒக்டோபர் 2021 இல் நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மனிதனுக்கு வெற்றிகரமாக ஒரு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி அறுவைச் சிகிச்சை செய்தனர்.
மூளைச்சாவு ஏற்பட்டு உயிர்க்காப்பு கருவிகளின் உதவியோடு சுவாசித்து வந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்று மருத்துவர்கள் சோதித்தனர்.
முன்னதாக, பன்றியிடம் இருந்து வந்த சிறுநீரகத்தை, மனித உடல் நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.