News

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

 

 

ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா என்ற சந்தேகம் நீடித்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

கொழும்பின் பிரதான எதிர்ப்பு முகாமை வன்முறையில் அகற்றுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரை விக்ரமசிங்க பயன்படுத்தியமை மற்றும் பல ராஜபக்ச விசுவாசிகளை அமைச்சரவையில் அவர் நியமித்தமை இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது, பதற்றங்களை எழுப்பியுள்ளது.

அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய நம்பிக்கையை முறியடித்துள்ளதாகவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் போதுமான ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

2023ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் எதுவும் எதிர்பார்க்கப்படாத நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் – ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாகனமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவுடன் – பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை.

எதிர்ப்பாளர்களின் பிரதான முகாம் மீது தாக்குதல் நடத்த விக்ரமசிங்க எடுத்த முடிவு, எதிர்கால எதிர்ப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவும், ஜூலை 9 அன்று விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் தீவைக்கப்பட்டதற்கு வெளிப்படையான பழிவாங்கலாகவும் பலரால் பார்க்கப்படுகிறது.

இலங்கையின் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்குலைவுகளில் இருந்து நாட்டுக்கு உதவுவதில் விக்ரமசிங்க தீவிரமானவராக இருந்தால், அவர் தனது மோதல் அணுகுமுறையிலிருந்து பின்வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக, விக்ரமசிங்க அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரது அரசாங்கம் தேர்தலைத் தவிர்க்க ஆர்வமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையே சார்ந்துள்ளது என்று அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தை பராமரித்தல் மற்றும் ஆழப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கிய வேலை, போராட்டக்காரர்களை சார்ந்துள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்பு இயக்கமானது உடல்ரீதியான மோதல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பு போன்ற உத்திகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

போராட்டம், கற்பனை செய்ததை விட ஏற்கனவே அதிகம் சாதித்துள்ளது. அது வெல்ல முடியாதது என்று பலர் எண்ணியிருந்த பலம் வாய்ந்த ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்தியது.

அத்துடன் போராட்டம், அரசியல் பேசுவதற்கும் செய்வதற்கும் இலங்கையில் ஒரு தீவிரமான புதிய இடத்தைத் திறந்துள்ளது.

எனவே இலங்கையின் பல நெருக்கடிகளின் சமீபத்திய கட்டத்தை எதிர்கொள்ள, எதிர்ப்பு இயக்கம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அணுகுமுறையை முற்றிலுமாக கைவிடாமல், புதிய அரசியல் கட்சியை அமைப்பது குறித்த அதன் விவாதங்களை இயக்கம் தொடர்வது நல்லது.

அத்தகைய கட்சியானது உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான தெளிவான நடைமுறைகளைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் மற்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவான அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஆர்வலர்கள் தலைமையில் நீண்டகாலமாக இயங்கி வரும் எதிர்ப்பு இயக்கங்களுடன் மிக ஆழமான தொடர்புகளை உருவாக்கவும், ஆற்றலைப் பெறவும், போராட்டக்காரர்கள் செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு சிங்கள மற்றும் பௌத்த தேசியவாதத்தின் நச்சுப் பாரம்பரியத்தை மாற்றுவது அவசியமாகும், இந்த தேசியவாத நச்சு பாரம்பரியமே, சித்தாந்த மையத்தை உருவாக்கி, பல தலைமுறைகளாக வன்முறை மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மறைப்பை வழங்கி வந்துள்ளது.

எனவே நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களால் அந்த மரபு கடுமையாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே, ஊழல், பொருளாதார முறைகேடு, சர்வாதிகாரம், இராணுவமயமாக்கல் மற்றும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற நீண்டகால ஜனநாயக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க இலங்கைக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்கும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top