இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இலங்கையிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இராஜினாமாவின் முறையான தன்மையை சரிபார்த்த பின்னர் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதன் மூலம் பதவி விலக முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.