பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டன.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நில அதிர்வின் மையம் அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகரத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 11 கி.மீ.தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக DZMM வானொலி நிலையத்திடம் வடக்கு இலோகோஸ் சுர் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் எரிக் சிங்சன் தெரிவித்துள்ளார்.
பயங்கர நிலநடுக்கம் 30 வினாடிகள் அல்லது அதற்கு மேல் நீடித்தது. என் வீடு இடிந்து விழுந்துவிடும் என்று நான் நினைத்தேன். அதிர்வு அவ்வாறு மோசமாக இருந்தது என்று சிங்சன் கூறினார்.
தொடர்ந்தும் சிறியளவிலான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. எனவே நாங்கள் எங்கள் வீட்டிற்கு வெளியே தான் இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலநடுக்கம் தலைநகர் மணிலாவிலும் வலுவாக உணரப்பட்டது. இதனையடுத்து நகரில் ரயில் சேவைகள் அவசர கதியில் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் சில பகுதிகளில் சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மணிலாவில் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என மாநில நில அதிர்வு அமைப்பின் பணிப்பாளர் ரெனாடோ சொலிடம் பிலிப்பைன்ஸ் DZMM வானொலி நிலையத்திடம் தெரிவித்துள்ளார்.