News

அரசியல்வாதிகள் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

 

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள் எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“இன்று எங்களுடைய போராட்டம் 13 வருடங்களையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் நீதிகிடைக்கவில்லை என்பதால் இன்று, தனித்துவமாக போராட்டத்தை 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தொடங்கி 5 ஆண்டுகளை கடந்துள்ளது.

தற்போது ஆறாவது வருடத்திலும் போராடிக்கொண்டிருக்கும் எமக்கு இலங்கை அரசாங்கமும் எந்தவொரு நீதியையும் தரவில்லை. இந்த நிலையில் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றும் அங்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம். அதேவேளை எமது போராட்டம் தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை 2000ம் நாட்களை அடைகின்றது.

அன்றைய தினம் மாபெரும் போராட்டமாக முன்னெடுக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரப்பிக்கப்படும் பேரணி டிப்போ சந்தியில் நிறைவடையும்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எமது உறவுகள் கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

எமது இந்த போராட்டம் பல்லாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் எமது போராட்டம் தொடர்பில் எந்த விடயமும் பேசப்படவில்லை. அரசியல்வாதிகள்கூட மௌனமாக இருந்தனர்”என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top