கிழக்கு ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
மேலும் வெள்ளப்பெருக்கால் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 -க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் பெரும் அழிவுகள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் நூற்றுக்கணக்கான கால்வாய்களையும் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களையும் அழித்தது. பெருமளவு பழத்தோட்டங்கள் அழிந்தன. சுமார் 2,000 கால்நடைகளும் கொல்லப்பட்டன என லோகார் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து பாதுகாப்புப் படையினரும் தொண்டு நிறுவனங்களும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு சர்வதேச நாடுகளிடம் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் 21 மாகாணங்களில் கனமழை மற்றும் வெள்ளம் எதிர்பார்க்கப்படுவதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் வெள்ளம் மற்றும் பெருமழையால் இறக்கின்றனர். குறிப்பாக ஏழை கிராமப்புறங்களில் மோசமாக கட்டப்பட்ட வீடுகள் பெரும்பாலும் இடிந்து விழும் ஆபத்தை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.