ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் திங்கிழமை மாலை முதல் கடும் மழை பெற்று வருகிறது. கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி திங்கட்கிழமை மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளின்போது மேலும் சிலரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் 40 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100 பேர் வரை காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.