ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 95 பேர் உயிரிழந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் வசம் ஆட்சி சென்ற பின்பு பொருளாதார மற்றும் மனிதநேய அடிப்படையிலான நெருக்கடியால் சிக்கி தவிக்கும் சூழலில், மேற்கத்திய நாடுகளின் தடையும் நிலைமையை மோசமடைய செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக 10 மாகாணங்களில் கனமழை பெய்து நாட்டை புரட்டி போட்டுள்ளது. இதனால், கடந்த ஜூன் மத்தியில் இருந்து இதுவரை 820 பேர் உயிரிழந்து உள்ளனர் என பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. 3.2 லட்சம் வீடுகள் சேதமடைந்தோ அல்லது அழிந்தோ போயுள்ளன. 129 பாலங்கள் சேதமடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உணவு தேவையை பூர்த்தி செய்ய அவசரகால குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. உதவி அமைப்புகள் உதவி அளிக்க முன்வந்துள்ளன என அந்நாட்டு பேரிடர் மேலாண் கழக துணை மந்திரி சராபுதீன் முஸ்லிம், சி.என்.என்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். எனினும் அது பற்றாக்குறையாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 95 பேர் உயிரிழந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அனைத்து வேளாண் நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கி முற்றிலும் அழிந்தோ அல்லது அறுவடை செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டோ உள்ளன என சராபுதீன் தெரிவித்து உள்ளார்.
குளிர்காலம் நெருங்க கூடிய சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு புகலிடம் அளிக்கும் வசதியும் இல்லை. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனில், வருகிற வாரங்கள் மற்றும் மாதங்களில் நிலைமை நிச்சயம் மோசமடையும் என அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இயற்கை பேரிடர்கள் மற்றும் தட்பவெப்பநிலை சார்ந்த நிகழ்வுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜூனில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.