News

ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்: மனுவல் உதயச்சந்திரா

 

 

கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (8) ஊடகங்களை சந்தித்த போது மனுவேல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து எதிர்வரும் 12 ஆம் தேதி உடன் 2000 நாட்கள் நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு நாங்கள் இந்த 2000 நாட்கள் வீதிகளில் நின்று போராடி இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை. என்று கூறி சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி இருந்தோம்.

ஆனால் இதுவரைக்கும் சர்வதேசமும் எங்களுக்கு எந்த ஒரு முடிவுகளும் சொல்லவில்லை.

வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் என்றாலும் இலங்கை போர் குற்றம், இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு ஒரு முடிவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த 2000 நாட்கள் நிறைவு போராட்டம் கிளிநொச்சி மாவட்ட கந்தசாமி கோவிலில் காலை 9 மணிக்கு ஆரம்பித்து டிப்போ வரையும் செல்ல உள்ள இந்தப் போராட்டத்தில், இன மத பேதம் பாராமல் இளைஞர்கள் யுவதிகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் இனத்தைச் சார்ந்த அனைவரும் எமக்கு உறுதுணையாக நின்று எமது கோரிக்கை வெற்றி பெறச் செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

2000 நாட்கள் என்று சொன்னால் சாதாரணமாக கிடையாது ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அதில் 139 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு உறவுகளும் மரணித்துக் கொண்டு போகும் போது எங்களிடம் உள்ள சாட்சிகளும் அவர்களோடு சேர்ந்து மரணித்துப் போகிறது.

அதேபோல் நாங்களும் மரணித்து போனால் எங்களுடைய சாட்சிகளும் இல்லாமல் போய் விடும் அதைத்தான் இந்த இலங்கை அரசாங்கம் விரும்புகிறது.

அதனால்தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி வருகிறோம். சர்வதேசம் எங்களுடைய கண்ணீரையும் அவல நிலையையும் பார்த்து எமக்கான தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று நம்பிக்கையோடு இந்த ஊடக சந்திப்பு செய்கிறோம்.

மேலும் அனைவரும் 12ஆம் தேதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கந்தசாமி கோவில் அடியில் ஒன்று போடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

மேலும் இந்த காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோகம போராட்ட களத்தில் போராடிய இளைஞர்கள் யுவதிகளை ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட அங்கு அயன் பாக்ஸ் எடுத்தவர்களையும் ,அந்த நீச்சல் குளத்தில் குளிப்பவர்களையும், தொலைபேசிகள் பேசியவர்களையும், ஜனாதிபதி செயலகத்தில் உணவு உண்டவர்களையும் தேடி, தேடி ,கைது செய்யும் இந்த அரசாங்கமும் பொலிஸாரும் ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?.

13 வருடங்களாக பொலிஸ் நிலையங்களுக்கு ஏறி இறங்கி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அறிவித்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

அரசாங்கத்தின் கைக்கூலியாகவே இந்த பொலிஸாரும் நீதியை மறந்து செயல்படுகின்றார்கள். உண்மையில் கைது செய்யப்பட்டு பாதாள சிறையில் அடைத்து வைத்திருந்தவர்களை உண்மைகள் வெளிவர போகின்றது. என்று தற்போது கொலை செய்து போடுகின்றார்களோ தெரியவில்லை.

இலங்கை ராணுவம், இலங்கைபொலிஸாரும் தற்போதைய ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி பிடிப்பதை போன்று அவர்கள் நினைத்திருந்தால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் தேடி கண்டுபிடித்து தந்திருக்கலாம் அவர்கள் நினைக்கவில்லை.

எனவே தான் நாங்கள் சர்வதேசத்திடம் மீண்டும் மீண்டும் நீதியை கேட்டு நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top