உக்ரைன் போரில் சிறுவர் சிறுமிகள் என 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருக்க கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது, 6 மாதங்களை நெருங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. போரானது நீண்டு கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
உக்ரைன் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமிகள், பெண்களுக்கு ரஷிய வீரர்களால் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த போரால், பெரியவர்களை விட சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு (யுனிசெப்) வேதனை தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அதன் செயல் இயக்குனர் கேத்தரீன் ரஸ்செல் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 6 மாதங்களுக்கு முன் உக்ரைனில் ஏற்பட்ட போரால் குறைந்தது 972 குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருக்க கூடும். இது, சராசரியாக ஒரு நாளைக்கு 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் என்ற வீதத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
. அனைத்து போர்களிலும் ஏற்படுவது போன்று, பெரியவர்கள் பொறுப்பற்ற முறையில் எடுக்கும் முடிவுகளால் குழந்தைகள் தீங்கில் சிக்கி கொள்கின்றனர். வெடிக்க கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவதனால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆயுதங்களுக்கு குடிமக்கள் மற்றும் எதிராளி என வேறுபாடு எல்லாம் தெரியாது.
குறிப்பிடும்படியாக, அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் பயன்படுத்தும்போது… அதுவே, உக்ரைனின் மரியுபோல், லுகான்ஸ்க், கிரெமன்சக் மற்றும் வின்னிட்சியா உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளது. இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என கேத்தரீன் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, உக்ரைனில் போரால் ஏற்பட்ட வன்முறையில் தப்பி செல்லும் குழந்தைகள் மனதளவிலும் ஆழ்ந்த பாதிப்புகளுக்கு இலக்காகின்றனர். குடும்பத்தில் இருந்து பிரிவது, தவறான முறையில் பயன்படுத்துதல், பாலியல் சீண்டல், தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இந்த போரால் கல்வி நடைமுறையும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 10ல் ஒரு பள்ளி கூடம் பாதிக்கப்பட்டோ அல்லது முழுவதும் அழிக்கப்பட்டோ உள்ளது என யுனிசெப் மதிப்பீடு செய்துள்ளது.