நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்துக்குள் லாரி புகுந்த விபத்தில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்
நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியுவ் பெய்ஜர்லாந்து நகரில் ஆற்றங்கரையோரமாக திறந்தவெளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான உணவு பிரியர்கள் கலந்து கொண்டு தீயில் வாட்டிக்கொடுக்கப்படும் அசைவ உணவுகளை ருசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு ஆற்றங்கரையில் இறங்கியது. அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய லாரி உணவு திருவிழாவில் கலந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் பலர் லாரி சக்கரங்களில் சிக்கி நசுங்கினர்.
இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.