கிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள வலென்சியாவின் வடமேற்கில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பயணிகள் ரயில் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பத்து பயணிகள் காயங்களுடன் தப்பியதாகவும், அதில் மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Bejís அருகே தீ பலத்த காற்றால் கட்டுக்கடங்காமல் போகவே, பல தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வலென்சியாவில் இருந்து வடக்கே சராகோசாவுக்குச் செல்லும் பயணிகள் ரயிலானத, தீ விபத்தில் சிக்கி நிறுத்தப்பட்டது. பயணிகள் எவரும் வெளியே இறங்க வேண்டாம் என சாரதி அறிவித்திருந்தும் சிலர் அச்சமடைந்துள்ளனர்.
48 பயணிகளுடன் குறித்த ரயில் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளது. ஆனால் நெருப்பு அந்த ரயிலின் அருகாமையில் வர சில பயணிகள் ஜன்னல்களை உடைத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
தப்பி ஓடியவர்களில் சிலர் தீக்காயங்களுக்கு ஆளாகினர் மற்றும் ஒருவர் வலென்சியாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ரயிலுக்குள் சிக்கியவர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சாரதி ரயிலினை பின்னோக்கி நகர்த்தி அருகிலுள்ள காடியல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். காட்டுத்தீ காரணமாக பெஜிஸ் மற்றும் அண்டை நகரங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
6,000 ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் கருகியிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினில் 2022 ல் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 400 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடுகளின்படி 275,836 ஹெக்டேர் நிலப்பரப்பு மொத்தமாக எரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.