முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளைத் தேடி 2009 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்த போராட்டத்தில் தீர்வுகள் காணப்படாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவில் தொடர் கவனயீப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
தமது உறவுகள் கிடைக்கும் வரை குறித்த போராட்டம் தொடரும் என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது எதிர்வரும் முப்பதாம் திகதி 2000 ஆவது நாளை கடக்கின்ற நிலையிலும் அன்றைய நாள் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்பதாலும் அன்றைய தினம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரி புதுக்குடியிருப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொண்டு தங்களுடைய போராட்டத்திற்கு வலுச்சேர்த்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் தமக்கான ஒரு தீர்வு கிடைக்கப்பெறுவதற்காக அனைவரையும் ஒன்று கூடுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமுமான ஓகஸ்ட் 30 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்திய சாலைக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும்,
ஓகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிதிகள், பொது அமைப்புக்கள் என அனைவரும் கலந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேச சமூகத்திடமும் எமது உறவுகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான குரலை எழுப்ப அனைவரும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஓகஸ்ட் 30 உலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் நினைவிற் கொள்படுகின்றது. நாங்கள் தொடர்ச்சியாக எங்களுக்கான நீதி கோரி போராடி வருகின்றோம்.
குற்றம் புரிந்தவர் இன்று நாடு நாடாக ஓடித்திரியும் இந்த வேளையில், எல்லோரும் ஒத்துழைத்தால் தான் நாம் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.