சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அந்த வகையில் கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தின் உதவியோடு சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தையில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர், 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது துருக்கி ராணுவத்தின் வான்தாக்குதலுக்கு பதிலடியாக சிரியா ராணுவம் நடத்திய தாக்குதல் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.