சூடானில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களில் சிக்கி 75 பேர் உயிரிழப்பு
சூடானில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தனர். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 12,551 வீடுகள் இடிந்ததாகவும், 20,751 வீடுகள் மழையின் போது சேதமடைந்ததாகவும் சூடானிய அரசு தெரிவித்துள்ளது.
சூடானின் 18 மாகாணங்களில் 12 மாகாணங்களில் 136,000 பேர் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத்தால் நடத்தப்படும் மனிதாபிமான உதவி ஆணையம் தெரிவித்துள்ளது.
238 சுகாதார நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் கூறியுள்ளது.
மேற்கு டார்பூர் பகுதி மற்றும் நைல் நதி, வைட் நைல், மேற்கு கோர்டோஃபான் மற்றும் தெற்கு கோர்டோஃபான் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சூடானின் மழைக்காலம் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெள்ளம் உச்சத்தை அடைகிறது.
கடந்த ஆண்டு மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2020 ஆம் ஆண்டில், அதிகாரிகள் சூடானை ஒரு இயற்கை பேரழிவு பகுதியாக அறிவித்தனர். வெள்ளம் மற்றும் கனமழையால் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100,000-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதனையடுத்து நாடு முழுவதும் மூன்று மாத அவசரகால நிலையை பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.