News

ஜெனிவா களத்தை எதிர்கொள்ள அறிக்கை தயாரிக்கும் அரசு

 

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக இலங்கையால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்படுகின்ற உள்நாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தலைமையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் பங்குபற்றலுடன் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுப் புதன்கிழமை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றுக்குரிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொறிமுறையொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரத்னம் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே.லேனகல, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான பியூமந்திர பீரிஸ் (சட்டம்), ஆர்.பீ.எஸ்.சமன் குமாரி, ரோஹண ஹப்புகஸ்வத்த, அமைதி , நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, அதன் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top