News

தமிழர்களின் தாயக கனவினை சிதைக்க பெரும் முயற்சி…  சாணக்கியன்!

 

 

 

கிழக்கில் தமிழ் தேசியத்தினை சிதைப்பதற்கு சிலர் முன்னெடுத்துவரும் முயற்சிகள் என்பது தமிழ் தேசியத்தினை நேசிக்கும் சக்திகளுக்கு பெரும் அச்சத்தினையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் தாயக கனவினை சிதைத்து சிங்களவர்களின் ஒற்றையாட்சி கோட்பாட்டை நிறுவுவதற்கு இன்று தமிழ் தேசிய பரப்பில் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் என்பவரும் ஒருவர், இவரையும் இவர்போன்றவர்களையும் சமூகத்திற்கு இனங்காட்டி எதிர்காலத்தில் இவர்களை தமிழ் தேசிய அரசியல் பரப்பிலிருந்து ஒதுக்கவேண்டிய பொறுப்பு தமிழர் தாயகம் உட்பட உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு உள்ளது.

இதன்காரணமாகவே இந்த பத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஒரு தடைவ எழுதுவதுடன் இன்று கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் தேசியத்தினை சிதைக்கும் செயற்பாடுகள் குறித்தும் இன்றைய இந்த பத்தியில் எழுதவேண்டிய தேவையுள்ளது.

தமிழர்களின் கடந்த 70 வருட போராட்டம் என்பது வெறுமனே தமிழர்களுக்கான அபிவிருத்திக்கான போராட்டமாகவோ, தமிழர்கள் தமது அன்றாட தேவையினை பூர்த்திசெய்வதற்கான போராட்டமாகவோ முன்னெடுக்கப்படவில்லை.

தமிழர்களின் போராட்டங்களான இராஜதந்திர போராட்டமானாலும் ஆயுதப்போராட்டமானாலும் அந்த போராட்டங்கள் தமிழர்களின் உரிமைசார்ந்த போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டுவந்தது.

பல்வேறு காலத்திலும் இந்த போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக பல்வேறு உத்திகளை சிங்கள அரசுகள் முன்னெடுத்தாலும் அவற்றினையெல்லாம் முறியடித்து இந்த போராட்டங்கள் முன்நகர்த்தப்பட்டன.

காலங்காலமாக தமிழர்களின் உரிமைசார்ந்த போராட்டங்களை முறியடிப்பதற்கு தமிழர் தரப்புகளில் உள்ள கறுப்பாடுகளை தெரிவுசெய்யும் சிங்கள அரசுகள் அவற்றின் மூலம் தமது இலக்கை அடைய முனையும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவற்றினை முறியடித்து தமிழர் தரப்பு தமது போராட்டங்களை முன்னெடுத்துவந்ததே வரலாறாகவுள்ளது.

இன்றைய நிலையில் வடகிழக்கினைப்பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது அழிக்கமுடியாத விருட்சமாகவே வளர்ந்து நிற்கின்றது. இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த போக்கானது கடுமையான வளர்ச்சியை நோக்கிச்செல்கின்றது.

இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக தமிழ் தேசியத்தின் பால் செயற்படும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் என்பது தமிழ் தேசியத்தின் வளர்ச்சிப்பாதையினை தடுக்கும் களைகளாக மாறிவருவதை காணமுடிகின்றது.

இந்த களைகள் என்பது எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்கான பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையினை ஏற்படுத்துவதுடன் குறித்த களைகளை அகற்றவேண்டிய பொறுப்பும் இன்று தமிழ் தேசிய சக்திகளுக்கு உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் தேசியத்தின் குரலாக அடையாளப்படுத்ததற்கு அப்பால் இராணுவ கட்டமைப்பின் மூலம் பலம்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தமது சமூகத்தின் அரசியல் பலத்தினை கட்டமைப்பதற்காக உருவாக்கிய ஒன்றாகும்.

அதைக்கூட வெளியில் சொல்ல வேண்டாம் என தடுக்கும் செயல்களும் சந்தர்பவாத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிலருக்கு உண்டு.

தாங்கள் இல்லாவிட்டாலும் தமிழர்களின் நியாயமான அரசியல் சக்தியாக விளங்கும் என்ற தேசிய தலைவரின் தீர்க்கதரிசனத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

கிழக்கில் தமிழ் தேசியத்திற்கான அடித்தளமிடப்பட்டாலும் தேசியத்தலைவரின் எண்ணக்கருவிலிருந்த விடயமே தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவானது.

தமிழர்களின் தமிழ் தேசிய கொள்கை என்பது வடகிழக்கு இணைந்த தாயகம்.அதில் சுயாட்சியுடனும் இறைமையுடனும் தமிழர்கள் வாழவேண்டும். தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதாகும்.

இந்த கொள்ளையானது தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தின்போதும் அதற்கு முன்பும் ஆயுதப்போராட்டங்கள் வலுவிழந்த காலப்பகுதியிலும் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலப்பகுதியிலும் உறுதியாகவே இருந்தது.

தமிழர்கள் தமக்கான வாய்ப்பினை தாங்களே உருவாக்கவேண்டும், இன்னுமொருத்தர் ஏற்படுத்திதரும் வாய்ப்பானது எமது உரிமையினையும் கோரிக்கையினையும் நிச்சயம் வலுவிழக்கச்செய்யும் என்பது தமிழ் தேசிய போராட்டம் உறுதியாக நம்பியதன் காரணமாகவே எந்த காலத்திலும் சில்லறைத்தனமான அரசியல் தீர்வினை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக இணைந்த வடகிழக்கினை சிங்கள தேசமும் இந்தியாவும் இணைந்து அறைகுறையாக வழங்கமுற்பட்டபோது இது இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றும் செயற்பாடு, இந்தியா இலங்கையின் ஏமாற்று வலைக்குள் சிக்கியுள்ளது என்று கூறி அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அதனை எதிர்த்தனர்.

அன்று விடுதலைப்புலிகளின் எதிர்ப்பினை தமிழர்களே சந்தேக கண்கொண்டு பார்த்த நிலையில் தீர்க்கதரிசமானமான எதிர்ப்பு என்பதை காலப்போக்கில் தமிழ் தமிழ் மக்கள் மட்டுமல்ல அன்றைய வடகிழக்கு மாகாணசபையினை ஏற்றுக்கொண்டு செயற்பட்டவர்களும் உணரும் நிலையேற்பட்டது.

அவர்கள் அன்று ஏற்றுக்கொண்டதன்காரணமாகவே காலப்போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் இணைந்து செயற்படும் நிலைக்குள் சென்றனர்.

இவ்வாறான நிலையில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் குரலாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சின்னாபின்னமாக்கி தமிழர்களின் பலத்தினை சிதைக்கும் வகையில் சிங்கள தேசம் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் தமிழ் தேசியத்தினையும் சிதைத்து தமிழர்களின் பேரம்பேசும் சக்தியினையும் தமிழர்களின் பலத்தினையும் சிதைப்பதற்காக சிங்கள சக்திகளினால் தமிழ் தேசிய பரப்பினுக்குள் பல்வேறு ஊடுறுவல்கள் செய்யற்பட்டுள்ளன.

கடந்த நல்லாட்சி என்னும் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் முன்னெடுத்த முன்னெடுப்புகளே தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான அதிதித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது.

இந்த நம்பிக்கையீனம் என்பது தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கையீனமாகயில்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையீனமாகவே வடக்கிலிருந்தது.

ஆனால் கிழக்கினைப்பொறுத்த வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான நம்பிக்கையீனம் என்பது தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கையீனத்தை தோற்றுவித்திருந்தது.

காரணம் நல்லாட்சியின் அபிவிருத்தி என்ற மாயையினை கிழக்கில் உருவாக்கி அதன்மூலம் தமிழர்களின் சுயநிர்ணயத்தினை குழிதோண்டி புதைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதற்கான காரணமாக அமைந்தது.

இதற்கு முழுமையான காரணமாகயிருந்தவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்று தேசிய பட்டியல் மூலம் உள்ளீர்க்கப்பட்ட சட்டத்தரணி சுமந்தரன் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும்.

சுமந்திரன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் தமிழ் தேசியத்தினை மூச்சாக நேசிப்போர் புறந்தள்ளப்பட்டதுடன் அவர்களை கட்சியிலிருந்து முழுமையாக ஓரங்கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பல்வேறு அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், படுகொலைகளுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் வளர்க்க அரும்பணியாற்றியவர்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டார்கள்.

தமிழ் தேசியத்தின் வாடையே தெரியாதவர்கள் உள்ளீர்க்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

காலப்போக்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக சுமந்திரன் உள்ளபோதிலும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவினரையும் அதன் தலைமையினையும் புறந்தள்ளி முடிவுகளை முன்னெடுக்கும் காரணகர்த்தாவாக மாறினார்.

இதற்கான முழுமையான அனுமதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

இன்றைய சுமந்திரனின் அனைத்துவிதமான தமிழ் தேசிய கொள்கையினை மழுங்கடிக்கும் செயற்பாட்டிக்கு பக்கபலமாக சம்பந்தன் ஐயா உள்ளதானது தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளவர்களை கலங்கச்செய்துள்ளதுடன் அதிலிருந்தும் ஒதுங்கச்செய்துள்ளது.

இந்த செயற்பாடானது இன்று தமிழ் தேசியத்திற்கான பாரிய வீழ்ச்சி நிலையினை வடகிழக்கில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் பலமான குரலாக தமிழர்களுக்கு இருந்தது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள தேசத்திற்கு மிகவும் ஆபத்தான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வளர்ச்சியடைந்துவந்தது.

ஆயுதப்போராட்டத்தினை விட ஜனநாயக ரீதியாக சிங்கள தேசத்திற்கு ஆபத்தாக வளர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரிப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை சிங்கள தேசம் முன்னெடுத்தது. அதில் சிக்கியே கஜேந்திரகுமார் அணி பிரிந்தது.அடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரிந்துசென்றார்.

இந்த நிலையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அதில் வெற்றியடையமுடியவில்லை.

இக்காலப்பகுதியிலேயே சுமந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் களமிறக்கப்பட்டார். அவரைதொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் மஹிந்த ராஷபக்சவின் விசுவாசியான சாணாக்கியன் தற்போது களமிறங்கியுள்ளார்.

சுமந்திரனின் ஆரம்பகால செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பினைப்பெற்றது.வடகிழக்கு பிரிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தமிழர்சார்பில் ஆஜரானதால் தமிழ் மக்கள் மத்தியில் இவர்மீது நம்பிக்கையிருந்தது.

ஆனால் காலம்செல்லசெல்ல இவரின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியதுடன் நல்லாட்சிக்காலத்தில் இவர் தொடர்பான முழு சுயரூபமும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டப்பட்டது.

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி தமிழ் தேசிய சக்திகளை பிரிப்பதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.

இந்த நிலையிலேயே கிழக்கிலும் இதுபோன்று தமிழ்தேசிய சக்திகளை பிரிப்பதற்கும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் ஒருவர் தேவைப்படவே அன்றைய காலத்தில் மகிந்தவின் சகாவாக செயற்பட்ட இரா.சாணக்கியன் களமிறக்கப்பட்டார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் தன்னையொரு ஹீரோவாக காட்டிக்கொண்டு தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்ததும் இன்று கிழக்கிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல்வேறு பிழவுகளை ஏற்படுத்திவருவதுடன் தமிழரசுக்கட்சியை தனியாக கொண்டுசென்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை சின்னாபின்னமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

இதன் பின்னணியில் சுமந்திரன் அவர்கள் செயற்படுகின்றார் என்பது வெளிப்படையாகவே தெரிந்துவருகின்றது. இவ்வாறான நிலையில் கிழக்கில் தமிழ் தேசியத்தினை சிதைக்கும் செயற்பாடுகளை கிழக்கில் அண்மையில் ஆரம்பித்துவைத்துள்ளனர்.

அண்மையில் சாணக்கியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையினை மாற்றி அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையில் பேசியுள்ளார்.

இதனை யாரும் ஒரு சிறுவிடயமாக கருதக்கூடாது.இது தமிழ்தேசியத்தின் மீதான சாகுமணி என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த பேச்சானது சாதாரண கூட்டங்கள் வைக்கப்பட்டு அதன் ஊடாக இளைஞர்கள் மூளைச்சலைசெய்யப்படுகின்றது.

இதனை வெறுமனே நாங்கள் கடந்துசெல்வோமானால் கிழக்கில் வதைக்கப்படும் இந்த நஞ்சு விதை வடகிழக்கினை மீண்டும் ஒரு படுகுழிக்குள் கொண்டுசெல்லுவிடும் நிலையினை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலைமைகளை இல்லாமல்செய்யப்படவேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும்.தமிழ் தேசியத்திற்காக ஒரு மாமனிதனாக சம்பந்தன் ஐயாவை இன்றும் தமிழ் சமூகம் நோக்குகின்றது.

அதன் காரணமாக அவர் கௌரவமாக ஓய்வுநிலைக்கு செல்வதற்கான வழிவகைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டும். தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதற்கான சிவில் சமூக கட்டமைப்பு ஒன்று வடகிழக்கில் அமையப்பெறவேண்டும்.

புலம்பெயர் தமிழ் தேசியவாதிகளைக்கொண்டதாகவும் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

இந்த கட்டமைப்பு இந்த காலத்தில் உருவாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமானதாகவே காணப்படுகின்றது.இதனை செய்வதற்கு தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அனைவரும் முன்வரவேண்டும்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top