சீனாவின் கடும் எதிர்ப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் பயணம் செய்த நிலையில், அதற்குப் பதிலடியாக தாய்வானைச் சுற்றி அதன் எல்லை அருகே சீனா போர்ப் பயிற்சிகளை நடத்தி வருவதுடன், ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் இந்தச் செயற்பாடு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தாய்வானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை இது அமைந்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவை தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நான்சி பெலோசி தாய்வான் சென்று அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுடன் பேசினார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயர்நிலைத் தலைவர் ஒருவர் தாய்வான் சென்றது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்தச் சூழலில் தாய்வான் ஜலசந்தி பகுதியைச் சுற்றிலும் சீன இராணுவம் நேற்று வியாழக்கிழமை முதல் 5 நாட்கள் போர் பயிற்சியை ஆரம்பித்தது.
இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ரொக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின் போது சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சீனாவின் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில், தாயவான் ஜலசந்தி பகுதியைச் சுற்றிலும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியது. இது தாய்வான் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவை தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாய்வான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான எங்கள் நீண்டகால குறிக்கோளுடன் பொறுப்பற்ற மற்றும் முரணான இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம் எனவும் ஜோன் கிர்பி கூறினார்.
தாய்வான் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க, நான்சி பெலோசியின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சீனா மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது.
இது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. பீஜிங் என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பமும் மாட்டோம். அமெரிக்கா உறுதியானதாகவும், நிலையானதாகவும் பொறுப்புடனும் இருக்கும். மேலும் பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.
அதே நேரத்தில், அமெரிக்கா, தைவானை ஆதரித்து, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியைப் பாதுகாத்து வருவதால், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, மேற்கு பசிபிக் கடல்களிலும் வானங்களிலும் எங்கள் போர்க்கப்பல்கள், விமானங்கள் பயணம் செய்யும்.
கடல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதற்கான அதன் நீண்டகால அணுகுமுறையுடன் அமெரிக்கா அடுத்த சில வாரங்களில் தாய்வான் ஜலசந்தி வழியாக நிலையான விமான மற்றும் கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் எனவும் ஜோன் கிர்பி கூறினார்.