பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 6 வீரர்கள் பலியாகினர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் இரவு குவெட்டாவில் இருந்து கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்றது.
ஹெலிகாப்டரில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 6 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த நிலையில் லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து மாயமான அந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
விடியவிடிய தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் நேற்று அதிகாலையில் மாயமான ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைதொடர்ந்து, புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதும், இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது