பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஆயிரத்து 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கி, கனமழை பெய்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா,பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஆயிரத்து 33 பேர் பலியாகி உள்ளதாகவும், ஆயிரத்து 527 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி மேலும் 119 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது