எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை செவ்வாய்க்கிழமை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனையொட்டி வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் வவுனியாவில் காலை10 மணிக்கு குடியிருப்பு பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகும் போராட்டம் அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்துடன் முற்றுப்பெறும்.
சர்வதேச நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை
அதேபோல யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் குறித்த போராட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே குறித்த போராட்டத்தில் தமிழ்தேசியத்தை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைகழகமாணவர்கள், மதகுருமார்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு காணாமல் போனவர்களின் விடயத்தில் சர்வதேச நீதியை பெற்றுக்கொள்வதற்கான எமது கோரிக்கையை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.