ஆப்பிரிக்க நாடான லிபியாவில் டீசல் லாரி வெடித்து சிதறியதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 70-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
அதைதொடர்ந்து டோங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க அங்கு குவிந்தனர்.
அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டீசலை சேகரித்துக்கொண்டிருந்தபோது, கவிழ்ந்துகிடந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இதில் டீசல் லாரியும், சாலையில் நின்ற ஏராளமான வாகனங்களும் தீக்கிரையாகின. மேலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.