வெள்ளப்பெருக்கு காரணமாக மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை விட்டு வெளியேற முடியாமல் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பூமியில் உள்ள மிகவும் வறண்ட, சூடான நிலப்பரப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை தான் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில், மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள், பூங்கா ஊழியர்கள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் பூங்காவை விட்டு வெளியேற முடியாமல் உள்ளே சிக்கியுள்ளனர்.
கனமழை காரணமாக சுமார் 60 கார்கள் மண்ணில் புதைந்து வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு இனி படிப்படியாக மழைப்பொழிவு குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு குறைந்து பூங்கா எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.