முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதனை தாமதப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெறும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
கோட்டாபயவை மீண்டும் ஒரு முறை அல்லது இரண்டு அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுஜன பெரமுன, ராஜபக்ச தரப்பினரை வலியுறுத்தி வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் எதிர்ப்பால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை முடிந்தவரை மீட்டெடுக்க வேண்டும் என்பது ராஜபக்சர்களின் திட்டமாகியுள்ளது.
கடந்த மே 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மக்களின் அதிருப்தி காரணமாக அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய நேரிட்ட ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன மற்றும் பவித்ரா வன்னி ஆராச்சி ஆகியோருக்கு, பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகள் வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டது. திட்டமிட்ட வகையிலேயே இந்த தெரிவு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்சவுக்கும் அமைச்சுப் பதவி ஒன்று எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய பசிலின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதுடன், கட்சி சார்ந்த பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.