ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதங்களில் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு இடமான ஜனாதிபதி செயலக அறையொன்றில் தனது இருபுறங்களிலும் இரண்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில், அமர்ந்து தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.
நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்கும் சவாலுடன் அவர் பணியாற்றி வருகிறார். எனினும் அந்த ஆசனத்தில் இருந்தே, அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் திவால்நிலைக்கு தலைமை தாங்கினார் என்று தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரின் செயல் மக்கள் மீது அவலத்தை ஏற்படுத்தி, நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியது. மூன்று மாதங்களாக, இடம்பெற்ற எதிர்ப்புகள் அவரை இந்த அலுவலகத்தில் இருந்து ஒதுக்கிவைத்து, ஜனாதிபதி மாளிகையில் தனி அறையில் இருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
இறுதியில் எதிர்ப்பாளர்கள் அங்கும் நுழைந்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமானதாக நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. அவர் தற்போது சிங்கப்பூரில் சிக்கியுள்ளார்.
எந்த நாடும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை, சவுதி அரேபியா கூட அவருக்கு உதவவில்லை. அங்கு நடப்பு ஆட்சியாளர் முகமது பின் சல்மானும் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை.
இந்தநிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பி மீரிஹனவில் சொந்த வீட்டில் வசிக்க விருப்பப்படுகிறார் அதுவும் தனக்கு நம்பிக்கையான படையினரை மாத்திரமே நம்பி அவர் அங்கு குடியேற விருப்பம் கொண்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர் முன்கூட்டியே திரும்புவதற்கு ஆதரவாக இல்லை. கோட்டாபய ராஜபக்ச காரணமாக எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து பெரும்பாலான இலங்கையர்கள் இன்னும் கசப்புடன் இருப்பதால், முன்கூட்டியே திரும்புவது எதிர்ப்புகளை மீண்டும் தூண்டிவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.
இந்த நேரத்தி;ல் அவரை காப்பாற்றவேண்டிய சில நடவடிக்கைகளை எடுத்தால், அது மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை கெடு;த்து விடும் என்று ரணில் நினைக்கிறார். மறுபுறத்தில் அவரை பிரதமராக நியமித்ததும், பின்னர், அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் இறுதியில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு வழி வகுத்ததும் கோட்டாபயதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனினும் ராஜபக்சக்களிடம் நண்பர் என்ற குற்றச்சாட்டில் இருந்து ரணில், மெதுவாக விலகிச் செல்ல முயற்சிக்கிறார் என்பதை இது காட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்காக பொதுஜன முன்னணியை நம்பியிருக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே அதனையும் நிலைகுழையாமல் பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ரணில் தள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திரைமறைவில் செல்வாக்கு செலுத்தி வருவதுடன் நிகழ்வுகளை தந்திரமாக கையாண்டு வருவதால், ரணில் எச்சரிக்கையாகவே நடந்துக்கொள்கிறார்.
எட்டாவது நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதன் பின்னர் கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர் மறைமுகமாக விமர்சிக்கப்பட்டார்.
இதற்கான மாற்று நடவடிக்கையாகவே அவர் சர்வ கட்சி அரசாங்கத்தை முன்நடத்திச் செல்ல முயற்சிக்கிறார். இதன்போது பசில் ராஜபக்சவினதும் பொதுஜன முன்னணியினதும் சூழ்ச்சிகளில் இருந்து தப்பி மீண்டும் தமது ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்பும் நோக்கமே ரணிலிடம் உள்ளது.
இதற்காக தம்மில் இருந்து பிரிந்துப்போன சஜித் அணியினரையும் இணைத்துக்கொள்ள அவர், முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என்று அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன