இளவரசர் 3-ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவகரத்து செய்தார். இதனை தொடர்ந்து டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் தற்போதும் மர்மம் நீடித்து வருகிறது.
இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.
பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்ல உள்ளது.