ஈகுவடாரில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபகோஸ் தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு ஒன்றில் கலாபகோஸ் தீவில் உள்ள கடலில் சென்று கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது எரிபொருள் தீர்ந்ததால் படகின் 3 என்ஜின்களும் வேலை செய்யாமல் நின்றது. அதை தொடர்ந்து படகு ஊழியர்கள் என்ஜின்களை செயல்படவைக்க முயன்றபோது நிலைதடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈகுவடார் கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஒருவர் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க்ப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பதுதெரியவில்லை.