News

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் – 50 பேர் பலி

 

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற மாஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.

ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டம் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top