News

உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

 

உக்ரைன் போரில் பங்கேற்று சண்டையிடுவதை விரும்பாத ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது.

மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார்.

எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷியர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ரஷியா-ஜார்ஜியா எல்லயைில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அதேபோல் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர். புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன.

இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷிய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனாலேயே ரஷியாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top