News

ஐ.நா வரைவுத் தீர்மானம் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு

இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் என்பதை தாம் நம்பவில்லை எனவும் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தற்போதைய அணுகுமுறையுடன் செல்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தமது கட்சி உடன்படாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை ஐ.நா வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத போதிலும் அதில் சாதகமான விடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணிலின் உறுதிமொழிக்கு வரவேற்பு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் தீர்வை வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வழங்கிய உறுதிமொழியை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வரவேற்றுள்ளது.

அதிபர் ரணிலின் அண்மைய நிலைப்பாட்டை தமது கட்சி வரவேற்பதாக யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே அதிபர் ரணிலிடம் முன்மொழிவுகளை கையளித்துள்ளதால், அங்கிருந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதிபர் ரணில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதில் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் எனவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதலாவது கொள்ளை விளக்க உரையில் அதிகாரப் பகிர்வை குறிப்பிட்டுள்ளமை சாதகமான ஒன்றெனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

அதிபர் ரணில் திறமையானவர் மற்றும் அனுபவமுள்ளவர் என்ற அடிப்படையில் அவரால் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவது சாத்தியமான ஒன்று என தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிபரின் கருத்துக்களுடன் அனைத்துக் கட்சிகளும் உடன்படவில்லை என்றாலும், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது தொடர்பான அவரது பரிந்துரைகளுக்கு பெரும்பான்மையானவர்கள் உடன்படுவார்கள் என நம்புவதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

51ஆவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசியல் தீர்வு மற்றும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திய இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியு்ளளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top