Canada

கனடாவை தாக்கிய பியோனா புயல்: வீடுகள் இடிந்து சேதம், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்…!

சக்திவாய்ந்த பியோனா புயல் தாக்கியதில் கனடாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.

அட்லாண்டிக் கடலில் உருவான சக்திவாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

 

தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது கனடாவை தாக்கியிருக்கும் பியோனா புயலால் நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

குடியிருப்புப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள பல வீடுகள் சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளன . பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு காரணமாக ஜப்பானில் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருந்த பயண திட்டத்தை ட்ரூடோ ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top