அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் 2 போர் கப்பல்கள் நேற்றுமுன்தினம் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது.
1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது.
அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.
இதனால் தைவான் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால் தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்கா அவ்வப்போது தைவான் ஜலசந்தி வழியாக தனது போர்க்கப்பல்களை இயக்கி சீனாவை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் 2 போர் கப்பல்கள் நேற்றுமுன்தினம் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை நிலைநிறுத்துவதற்கான தங்களின் உறுதிப்பட்டை வெளிப்படுத்தும் வழக்கமான நடவடிக்கை என அமெரிக்கா மற்றும் கனடா ராணுவம் தெரிவித்துள்ளன.
அதே சமயம் இது ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என கூறி அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தைவான் தனது கட்டுப்பாட்டில் வருவது தவிர்க்க முடியாதது என்றும் அதே சமயம் அதை அமைதியான முறையில் அடைவதற்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.