ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று ‘நான்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.
சாலைகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது.
இடைவிடாமல் கொட்டிய பேய் மழையால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
புயல், மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
மேலும் குடிநீர் வினியோகம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் தடைப்பட்டுள்ளன. இந்த புயலால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். புயல் காரணமாக கியாஷூ தீவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், படகு போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இதனிடையே ‘நான்மடோல்’ புயல் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் சுமார் 90 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.