ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளதுடன் 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது எனவும் தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. இம்முறை அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள யோசனைக்கு மேலதிகமாக மனித உரிமை ஆணையாளர் இலங்கை சம்பந்தமாக முன்வைத்துள்ள அறிக்கையிலும் கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு செலவுகளை குறைத்தல், வடக்கு, கிழக்கில் இராணுவத்தை குறைத்தல், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் உட்பட பல பிரதான பரிந்துரைகள் அவற்றில் அடங்கும்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை சம்பந்தமான வாக்கெடுப்பு எதிர்வரும் 4 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு இடையில் ஒரு நாள் நடைபெறவுள்ளது.