News

டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்!

டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 பக்க ஆவணத்தில், டிரம்ப்பிற்கு சொந்தமான அனைத்து வணிகத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிரம்பின் சொத்துக்களை பொய்யாக உயர்த்த முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளதாவது:- டிரம்ப், தனது குழந்தைகளான இவான்கா, டான் ஜூனியர், எரிக் மற்றும் டிரம்ப் அமைப்பில் உள்ள நிர்வாகிகளின் உதவியுடன், தொடர்ந்து கடன் ஒப்பந்தங்களை திருப்திப்படுத்த டிரம்பின் சொத்து நிகர மதிப்பை பொய்யாக உயர்த்தினார்.

2011 மற்றும் 2021 க்கு இடையில், டிரம்ப் மற்றும் டிரம்ப்பின் அமைப்பு 200க்கும் மேற்பட்ட தவறான மதிப்பீடுகளை அவரது சொத்துக்களுக்கு தெரிந்தே உருவாக்கியது.அவர்கள் கடன் வழங்குபவர்களை தவறாக வழிநடத்தி அதிக சாதகமான கடன்களைப் பெற முயற்சித்தனர், மேலும் குறைந்த பிரீமியத்தில் அதிக வரம்புகளுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற முயற்சித்தனர், வரிச் சலுகைகளைப் பெற முயற்சித்தனர் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டிரம்ப் அமைப்பின் கார்ப்பரேட் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க்கில் பதிவுசெய்யப்பட்ட டிரம்ப்பின் வணிகத்தின் இயக்குநராக பணியாற்றுவதில் இருந்து, டிரம்ப் மற்றும் வழக்கில் பெயரிடப்பட்டுள்ள அவரது குழந்தைகளை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது. ஏற்கனவே டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய வழக்கு டிரம்ப் மற்றும் குடும்பத்துக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top