News

தமிழர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்நாட்டுப் பொறிமுறையை பரிந்துரைக்கும் ஐ.நா. வரைவுத் தீர்மானம்!

 

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் யோசனை இந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.

இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான எதிர்கால விசாரணைக்குத் தேவையான ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உள்ள திறனை நீடிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.

தீவிர இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக் கூறல் இல்லாமை மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விலக்கு உட்பட இலங்கையின் நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படைக் காரணிகள் மற்றும் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் வரைவுத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

சிவில் அரசாங்க செயல்பாடுகளை தொடர்ந்து இராணுவமயமாக்கல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரமற்ற போக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகால குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் முன்னேற்றமின்மை; கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இறந்தவர்களை நினைவேந்தல் தடை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை துன்புறுத்துதல் போன்வை குறித்து தீா்மானம் கரிசனை செலுத்துகிறது.

காணாமல் போனோர் அலுவலகம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை மீண்டும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான இலங்கையின் கூற்றுக்களை இந்தத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது.

எனினும் பல ஆண்டுகளாக சர்வதேச சட்டத்திற்கு அமைவாக சட்டம் திருத்தப்படும் என்று இலங்கை சர்வதேச சமூகத்திற்கு பல உறுதிமொழிகளை அளித்துள்ளது. இன்றுவரை, போதுமான சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பதையும் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

தனிநபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும், கைதிகளை சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மோசமான சிகிச்சைக்கு உள்ளாக்குவதற்கும் ஒரு கருவியாக இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துகிறது என்று தீர்மானம் கூறுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை இலங்கை எட்டியுள்ளது என்ற அறிவிப்பை தீர்மானம் வரவேற்றுள்ளது. அத்துடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி ஊதியம் பெறுபவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்கள் உட்பட மிகவும் பின்தங்கிய தனிநபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தீா்மானம் வலியுறுத்துகிறது.

அத்துடன், வரைவுத் தீர்மானத்தில் இறுதிப் பத்தி இலங்கையில் மனித உரிமைகள் குறித்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை தொடருமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கோருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top