News

தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் – ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம்

 

பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளே முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள், மனித உரிமைப் பேரவை பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில், 22 செப்டம்பர் 2011 புதன்கிழமை அன்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தர்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ந. சிறீகாந்தா ஆகியோர் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவை வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம் தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி வைத்திருந்த போதிலும், வெளிவந்திருக்கும் மாதிரிப் பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையும் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டுமென்ற விடயமும் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

அழிவுகளுக்கான அனுபவத்தை கொண்டவர்கள் நாம். சர்வதேச சமூகத்தின் செயலற்ற நிலையினால் நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் முகமாக மனித உரிமைப் பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணையில் நமது கோரிக்கைகள் உள்ளடக்கப் படாமல் இருப்பதை அவதானிக்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை மாத்திரமல்லாமல் ஐ.நா உயரதிகாரிகளின் பரிந்துரைகளையும் உதாசீனம் செய்யாது சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை பாரப்படுத்தும் எமது பிரதான கோரிக்கையை உள்ளடக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top