தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் துப்பாக்கிச்சூடு; 2 வீரர்கள் உயிரிழப்பு
தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதான ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ வீரர் சுட்டதில் 3 வீரர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த ராணுவ வீரர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 வீரர்களையும் சக வீரர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய அந்த ராணுவ வீரர் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.