தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்று(26) மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வூபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கி.துரைராஜசிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதி தலைவர் நகுலேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் கலந்தகொண்டனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றது.
இதன்போது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்கள் தங்களிடமே தந்துள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நினைத்துக்கொண்டு இவ்வாறான தியாகிகள் நிகழ்வுகளில் தனித்து செயற்படமுனைவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்