தென்னாப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் லொறி மோதி நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 12 வயதுக்குட்பட்ட 19சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குவாசுலு-நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் தனியார் பாடசாலை மாணவர்களை பாடசாலை முடிந்து ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்தில் சிக்கியது. இந்தப் பேருந்தில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பேர் இருந்தனர்.
பொங்கோலா நகரில் உள்ள வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த லொறி ஒன்று பாடசாலை பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்து மோசமாகச் சிதைந்து அதில் இருந்த 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவாசுலு-நடால் மாகாண அரசாங்கம் ஆறுதல் தெரிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான விபத்துக்கான காரணம் குறித்து துரித விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மாகாண அரசாங்கம் உறுதியளித்துள்ளது.