News

தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது; சஜித் 

“தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது. மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் காலத்தை இழுத்தடிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் – ராஜபக்ச அரசு விரைவில் கவிழப் போகின்றது. இந்தநிலையில், ஏதோவொரு வழியில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காகவே தேசிய பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு என்று கூறி மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகின்றது.

தீர்வு விடயம் தொடர்பில் பேச்சு விரைவில் ஆரம்பம் என்று ஜனாதிபதி பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று புலம்பெயர் இலங்கையர்களிடமும், வெளிநாட்டு முக்கியஸ்தர்களிடமும், வெளிநாட்டு ஊடகங்களிடமும் பொய்யுரைக்கின்றார். அவரின் பாணியில் பிரதமர் உள்நாட்டிலிருந்து பொய்யுரைக்கின்றார்.

வாயால் எதையும் சொல்ல முடியும். ஆனால், அதைச் செயலில் காட்ட வேண்டும். செயலில் இறங்க இந்த அரசுக்குப் பலம் இல்லை. இந்த அரசு கவிழும் நாளும் வெகுதொலைவில் இல்லை” – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top