பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும், சில சுகாதார நிலையங்கள், வீடுகள், கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளதாகவும் ஐநா அறிக்கையில் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது, இதனால் கிழக்கு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.