பிலிப்பைன்ஸ் நாட்டை நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடக்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
பிலப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியை ‘நோரு’ என்கிற பயங்கர புயல் நேற்று தாக்கியது. அங்குள்ள அரோரா, நியூவா எசிஜா ஆகிய இரு மாகாணங்களையும் இந்த புயல் பந்தாடியது.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் பேய் மழை கொட்டியது.
இதில் அரோரா மற்றும் நியூவா எசிஜா மாகாணங்களில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை சுமார் 52 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர். இதனிடையே புயல், மழையை தொடர்ந்து அரோரா மற்றும் நியூவா எசிஜா மாகாணங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
இதனிடையே அரோரா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் படகில் சென்று கொண்டிருந்தபோது, இடிந்து விழுந்த சுவரின் மீது படகு மோதி கவிழ்ந்தது. இதில் மீட்பு குழுவினர் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.