ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நாளை ஆரம்பமாகும் நிலையில், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நாடுகள் தயாராகின்றன.
எனினும் இந்த முறை இலங்கைக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் காரணம் கிடைத்திருக்கின்றது.
வழமையாக ஏதாவது காரணங்களை கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக முக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளன.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையும் கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.இந்த நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார கீழ்நிலையை காரணம் காட்டி, ஐக்கிய நாடுகளின் யோசனையை பிற்போடும் கோரிக்கையை இலங்கையின் சார்பில் அங்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி விடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொருளாதார நிலையை மனித உரிமைகள் மீறல் விடயத்தில் சமரசம் செய்ய முயலக்கூடாது என்று ஏற்கனவே மனித உரிமைகள் பேரவை தெரிவித்திருக்கிறது.
இந்தநிலையில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்மொழியப்பட்டு பின்னர் கோட்டாபய ராஜபக்சவினால் தூக்கியெறியப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு யோசனையை சாப்ரி, மீண்டும் பேரவையில் அறிவிக்கவுள்ளார்.
இந்த யோசனை முன்னர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலுடன் கூறப்பட்டபோதும், தற்போது அவர் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதால், மனித உரிமைகள் பேரவை அதனை நம்பி ஏற்றுக்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன