News

 ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 

ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதனிடையே, ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து விரைந்த வண்ணம் உள்ளனர்.

2-ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணி எலிசபெத்தின் 8 பேரக்குழந்தைகளும் அவரது உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ராணுவ உடையிலும், இளவரசிகள் பீட்ரைஸ், யூஜெனி, சாரா டிண்டால் உள்ளிட்டோர் கருப்பு நிற உடையிலும் வந்து ராணியின் சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.

நாளை அதிகாலை வரை ராணியின் உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும். பின்னர், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இறுதிச்சடங்கை தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அந்நாட்டின் நேரப்படி காலை 11.40 முதல் பிற்பகல் 12.10 வரை 30 நிமிடங்களுக்கு விமானங்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது விமான சத்தத்தால் ஏற்படும் ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றுள்ளார். அவர் இன்று வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

நாளை நடைபெற உள்ள 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் பொல்சனேரோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்டோரும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

இறுதிச்சடங்கினை இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இறுதிச்சடங்கை காண பெரிய திரைகள் அமைக்கப்படும் என்றும் ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top