ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது.எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன.
அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
இது குறித்து அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சர்வதேச பத்திரிகையாளர் சனிக்கிழமையன்று ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையின் முரட்டுத்தனமான நடத்தையை படமெடுத்து வெளியிட்டுள்ளார்.
ஈரானில் ஹிஜாப் அமலாக்க ரோந்துப் படையினரால் கிட்டத்தட்ட ௧௬,000 பெண்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்கள் பல பெண்களை தெருக்களில், சில சமயங்களில் கொடூரமாக தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.