புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமானது ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம், அதிபர் ரணில் விக்ரமசிங்க வியாழன் அன்று தனது அரசாங்கத்தில் 37 புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார், அவர்களில் மூன்று பேர் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினராவார். அவர் சிறுவர்களைக் கடத்தல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களில் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர். பின்னர் அவர் அரசு சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார், அது கடத்தல் மற்றும் சிறுவர்களை படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொன்றது தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை ஜனவரி 2021 இல், சட்டமா அதிபர் கைவிட்டார். தற்போது அவர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆவார், இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இப்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக உள்ளார்.
மேலும், புதிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதற்காக தற்போது காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மே 9 அன்று, கொழும்பில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தாக்குதலை நடத்தினர் சம்பவம் தொடர்பில் மே 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிஷாந்த, ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை பொருளாதார முறைகேடு, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மார்ச் மாதம் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதாகவும், இறுதியில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க அதிபராக வருவதற்கு வழிவகுத்ததாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே மாதம், இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை, செப்டம்பர் 1 அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்புத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டது. அதிபர் விக்ரமசிங்க, எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக கலைக்க இராணுவத்தைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமானவர்களைக் கைது செய்ததன் மூலம், கடுமையான ஒடுக்குமுறையை விரைவாகத் தொடங்கினார். அவர் கொடூரமான மற்றும் மதிப்பிழந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கிறார்.
இந்த மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த புதிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த வாரம் அரசாங்கத்தின் மோசமான நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதை ஐநா உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது..